Monday, September 15, 2014

மனைக்கும் தேவை
 பாதுகாப்பு!

மனைக்கும் தேவை
 பாதுகாப்பு!

வீடு கட்டுவதற்காக மட்டுமே மனைகளை வாங்கிய காலம் மலையேறிவிட்டது. முதலீட்டு நோக்கத்தில் மனை வாங்குவது அதிகரித்தவண்ணம் உள்ளது. மாதந்தோறும் சிறுகச் சிறுகப் பணம் கட்டி மனை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து விட்டது. இப்படிக் கஷ்டப்பட்டு வீட்டு மனையை வாங்குபவர்கள் அதை முறையாகப் பராமரிக்கின்றார்களா என்றால் இல்லை.

வீட்டு மனை வாங்குபவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் பெயரில் சொத்தை பதிவு செய்வதுடன் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். அது மிகவும் தவறு. நாம் வாங்கிய மனைக்குத் தனியாகப் பட்டா வேண்டும். அது இல்லாதபட்சத்தில் மனையைப் பதிவு செய்த ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்துக்குச் சென்று பட்டா கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருவேளை வாங்கிய மனைக்கு ஏற்கனவே பட்டா வாங்கப்பட்டிருந்தால், அதை விற்றவரின் பெயரிலிருந்து நம் பெயரில் மாற்றி கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றாவிட்டால் பிற்காலத்தில் பிரச்னை எழ வாய்ப்பு உள்ளது. இறந்து போன தந்தை அல்லது தாய் பெயரில் மனை இருந்தால், பெயர் மாற்றம் செய்து நம் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்குத் தந்தை அல்லது தாயின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் தேவைப்படும்.

மனையில் உடனடியாக வீடு கட்டவில்லையென்றால், மனையைச் சுற்றிக் கல் நட்டு, கம்பி வேலி அமைப்பது நல்லது. குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது மனையைப் பார்வையிட வேண்டும். இல்லாவிட்டால், மனையை யாராவது ஆக்கிரமிப்பு செய்து கொள்ள வாய்ப்புகள் உண்டு. இப்போதெல்லாம் சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வேலி அமைத்துச் சில ஆண்டுகளுக்குப் பராமரிப்புப் பணிகளையும் செய்து தருகின்றன. இதுபோன்ற நிறுவனங்களின் மனைப்பிரிவில் மனை வாங்குவது நல்லது.

வீட்டு மனை, நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகள் மற்றும் அதற்கான ஆவணங்கள் பற்றிய விவரங்களை வீட்டு உறுப்பினர்களிடம் சொல்லி வைப்பது நல்லது. மனை உரிமையாளர் எதிர்பாராதவிதமாக மரணமடைய நேரிட்டால், வாரிசுகள் அதை இனம் கண்டு அனுபவிக்க வாய்ப்பாக அமையும்.

No comments:

Post a Comment