Monday, September 15, 2014

பழைய ‘பிளாட்’ வாங்குகிறீர்களா?

பழைய ‘பிளாட்’ வாங்குகிறீர்களா?

மனையின் மதிப்பு மற்றும் கட்டுமான பொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு உள்ளிட்டவை அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் விலை அதிகரிப்புக்கு அடிப்படை காரணங்களாக மாறுகின்றன. இதன் எதிரொலியாக நகர்புறங்களில் வீடு வாங்க நினைப்பவர்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய வேண்டிய நிலையை சந்திக்க வேண்டியுள்ளது. பணம் புரட்டுவது ஒருபுறம் இருக்க வாங்கும் வீடு எத்தகைய வில்லங்கத்துக்கும் இடம் கொடுக்காமல் இருக்கிறதா? என்பதையும் உற்றுநோக்க வேண்டி இருக்கிறது.
அதிலும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கும்போது ஆழமாக அலசி ஆராய வேண்டி இருக்கிறது. அதேவேளையில் அடுக்குமாடி குடியிருப்பில் பழைய ‘பிளாட்டை’ வாங்குவதாக இருந்தால் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் அதிக சிரமப்பட வேண்டியது இருக்காது. விலையும் பத்து, பதினைந்து லட்சம் வரை குறைவாக கிடைக்கும் என்ற மனோபாவம் சிலர் மனதில் எழுந்திருக்கிறது. அதன் தாக்கமாக பழைய ‘பிளாட்டை’ வாங்கி புதுப்பித்து குடிபுகும் பழக்கமும் மெல்ல மெல்ல பரவி வருகிறது.
இருந்தபோதிலும் பழைய ‘பிளாட்டை’ வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அது என்னவென்று பார்ப்போம்.
* பழைய பிளாட் விலைக்கு வருகிறது என்றால் அது விற்பனை செய்யப்படுவதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
* வீட்டை விற்பனை செய்பவரின் பின்னணி என்ன? என்ன காரணத்துக்காக விற்கிறார்? வீட்டின் உரிமை தொடர்பாக பிரச்சினை ஏதும் உள்ளதா? என்பதை விசாரிக்க வேண்டும். அல்லது அந்த வீட்டை கட்டிய பில்டருக்கும், அதை வாங்கிய மற்றவர்களுக்கும் இடையே நில உரிமை தொடர்பாக பிரச்சினை ஏதும் உள்ளதா? அது தொடர்பான வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரிப்பு இருக்க வேண்டும். முக்கியமாக வீடு குறைந்த விலைக்கு வருகிறது என்றால் இந்த விஷயங்களை உன்னிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
* வீடு, அது சார்ந்த இடம் தொடர்பான ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று அலசி ஆராய வேண்டும். வீட்டுக்கான மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவை முறையாக செலுத்தப்பட்டு இருக்கிறதா? என்று சரிபார்க்க வேண்டும்.
* வீடு விதிமுறை மீறல் இல்லாமல் கட்டப்பட்டு இருக்கிறதா? அல்லது விதிமீறல் புகார் எதுவும் விசாரணையில் உள்ளதா? என்பதை விசாரிக்க வேண்டும். ஏனெனில் சில இடங்களில் நான்கு மாடிக்கு மட்டும் அனுமதி வாங்கப்பட்டு ஐந்தாவது மாடியிலும் வீடுகள் எழுப்பி இருக்கலாம். அனுமதியின்றி கட்டப்பட்ட விவரம் மறைக்கப்பட்டு வீட்டை விற்பதற்கு முயற்சி நடக்கலாம். ஆகையால் உஷாராக இருக்க வேண்டும்.
* வீடு இருக்கும் இடம் சூழ்ந்த பகுதி அரசின் திட்டங்களுக்காக கையப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா? என்றும் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
* குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்ற வசதிகளை கொண்டதாக வீடு இருக்கிறதா? என்று அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
* வீட்டை வாங்க முடிவு செய்யும் பட்சத்தில் கட்டுமான துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் ஆலோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது. வீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் தொகையை சந்தை மதிப்புடன் ஒப்பிட்டு லாபம் தரக்கூடியதாக இருக்கிறதா? வீடு அமைந்திருக்கும் பகுதி பிற்காலத்தில் மேலும் விலை மதிப்பு உயரும் வகையில் வளர்ச்சி அடையுமா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* பழைய வீட்டை வீட்டு உரிமையாளரிடம் இருந்து நேரடியாக வாங்குவதே நல்லது. வீட்டுக்கான மதிப்பிடப்பட்ட ரொக்கப்      பணத்தையும் நேரடியாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காசோலை மூலம் பணப்பரிமாற்றம் நடைபெறுவது நல்லது.

No comments:

Post a Comment