Wednesday, November 5, 2014

திருமணத்தை பதிவு செய்ய தேவையான முறைகள்..!

திருமணத்தை பதிவு செய்ய தேவையான முறைகள்..!
நம் ஊரில் தற்போது பல திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஆனால் பலர் அவர்களின் திருமணத்தை பதிவு செய்வது இல்லை. காரணம் விழிப்புணர்வு இல்லாமை. சிலர் அதான் பள்ளிவாசல் தப்தரில் பதிவு செய்து விட்டோமே, பிறகு எதற்கு மீண்டும் ஒரு பதிவு என்று வினவுவதும் உண்டு. நாம் திருமணத்தை பதிவு செய்யலாமா..? வேண்டாமா..? என்ற விவாதத்திற்குள் நான் செல்லவில்லை. நான் என்னுடைய தேவைக்காக திருமணத்தை பதிவு செய்ததின் அனுபவ கட்டுரையே இது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பல மாநிலங்கள் கட்டாய திருமண பதிவு சட்டத்தை கொண்டு வந்துள்ளன.
நம் தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது. நம் அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
சரி, கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ் நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009 சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்தே ஆகனும். அனைத்து மதத்தவர்களும் கண்டிப்பாக பதிவு செய்யனும்.
எங்கே பதிவு செய்வது..?
உங்கள் திருமணம் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்த அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். நமக்கு காட்டுமன்னார் கோவில் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யனும்.
எப்படி பதிவு செய்வது.?
திருமணத்தை பதிவு செய்ய தனியாக விண்ணப்பங்கள் உள்ளன. அதை சார் பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது எதிரில் உள்ள ராமு பத்திரப்பதிவு கடையில் பெற்றுக்கொள்ளலாம். கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து, அவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, அத்துடன் திருமணத்தைப் பதிவு செய்வதற்கான மனுவை இணைத்து கொடுக்கணும்.
மேலும் தேவையானவைகள்.
இருவருக்கும் அடையாள அத்தாட்சி காப்பி கொடுக்கணும் (உதாரணமாக குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வண்டி ஓட்டுனர் அட்டை போன்றவைகள்..)
கணவருக்கும், மனைவிக்கும் தனித்தனியாக ஒரு சாட்சிகள்.( தந்தை ஆக இருப்பது நலம்).
இந்த சாட்சிகளுக்கும் அடையாள அத்தாட்சி காப்பி இணைக்கனும்.
திருமணம் நடந்து முடிந்த பள்ளிவாசலில் இருந்து திருமண சான்றிதல். குறிப்பாக மணமக்கள், ஆலிம் அவர்கள், சாட்சிகள் கையழுத்து போட்ட தப்தர் பக்கம் இருப்பது மிகவும் சிறந்தது. (சில சமயம் இந்த கையழுத்து பக்கம் இல்லை என்றால், பள்ளிவாசலில் கொடுக்கும் திருமண சான்றிதழை நோட்டரி பப்ளிக் அவர்களிடம் அட்டெஸ்ட் வாங்கனும்).
• ஆக, அனைத்து சான்றிதல்களையும் காப்பி எடுத்து, அதை உரிய அரசாங்க அதிகாரியிடம் அட்டெஸ்ட் பண்ணனும். லஞ்சம் வாங்காமல் அட்டெஸ்ட் பண்ணுவது, நம் பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள் தான்.
• மேலும், திருமணத்துக்காக வரதட்சணை எதுவும் கேட்கப்படவில்லை, கொடுக்கப்படவில்லை, வாங்கப்படவில்லை என்றும் (இந்த விவரம் படிவத்திலேயே காணப்படுகிறது) உறுதி அளிக்க வேண்டும்.
• ஆக மொத்தம் அனைத்து படிவங்கள், அட்டெஸ்ட் பண்ணப்பட்ட சான்றிதழ்கள், மணமக்கள், இரு சாட்சிகள் ஆகியவைகள் ரெடி தானே.. வாங்க செல்லுவோம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு.
• அனைத்தையும் சார் பதிவாளர் அவர்களிடம் கொடுத்து விபரம் கூறவும். அவர் அனைத்தையும் அலுவலகம் உள்ளே இருக்கும் அம்மணியிடம் கொடுக்கசொல்லுவார். ரூல்ஸ் அதிகம் பேசினால் அம்புட்டுதான். அலைய விட்டுவிடுவார்கள்.
• அது சரி இல்லை, இது சரியில்லை. இதில் “க்” கன்னா இல்லை, இதில் “கு” னா இல்லை, அட்டெஸ்ட் சரியில்லை, போட்டோ கிளியர் இல்லை, இந்த மையால் எழுதக்கூடாது.. இப்படி பல வழிகளில் நம்மை ஆப்பு அடித்து விடுவார்கள்.
கட்டணம் விபரம் :
o திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கான கட்டணம் 100 ரூபாய்.
o 90 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாதவர்கள், அடுத்த 60 நாள்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவு செய்து கொள்ள வேண்டும்.
o உங்களுக்கு கூடுதல் காப்பி வேண்டும் என்றால், ஒவ்வொரு காப்பிக்கும் பத்து ரூபாய் கூடுதல் கொடுக்கனும்.
o நீங்கள் பதிவு செய்ய செல்லும்போது உங்களுடைய ஒரிஜினல் அடையாள அட்டையை கொண்டு செல்லனும்.
உங்களின் அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்பட்டு, கையழுத்து, கைநாட்டு வாங்கப்பட்டு விட்டால், முதல் கண்டம் தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம்.
பலர் ஆறு ஏழு முறை படை எடுத்தவர்களும் உண்டு. பலர் ஏன் திருமணம் பண்ணினோம் என்று நொந்தவர்களும் உண்டு. திருமணம் ஈசி ஆக நடந்து விடும், பதிவு செய்வதற்கு தாவு தீர்ந்து விடும்.
இனி, அவர்கள் கூறும் நாளில் சென்று (குறைந்தது ஒரு வாரம்), புரூப் (proof) பார்த்துவிட்டு, தவறுகள் இருந்தால் திருத்தி, அவர்கள் மீண்டும் கூறும் நாளில் சென்று உங்களுடைய கட்டாய திருமண பதிவு சான்றிதழ்களை பெற்று வாருங்கள்.
இன்னும் ஒரு விசயம் உள்ளது.. குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால், அது சட்டப்படி குற்றம். தண்டனையும் உண்டு. நோ டென்ஷன்…தண்டனை அதிகம் இல்லை.. தண்டனை 1000 ரூபாய் அபராதம் மட்டுமே.

http://lalpetexpress.com/
SMS ஹாஜா. B.Sc.,

மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்கு கணவர் உரிமை கொண்டாட முடியுமா?

மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்கு கணவர் உரிமை கொண்டாட முடியுமா?

ஒரு சொத்து எந்த வகையில் வந்தது என்பதை பொறுத்து அதன் உரிமை அடங்கி இருக்கிறது. பூர்வீக சொத்தாக இருந்தால் அந்த சொத்தை அனுபவிப்பவருக்கு பின் அவருடைய மகனுக்கும், பேரனுக்கும் உரிமை உண்டு. அதனால் தான் தாத்தா சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டு என்பது உறுதி படுத்தப்பட்டதாக இருக்கிறது.
சொத்தில் பெண்ணுக்கான அதிகாரம்
அதே வேளையில் பூர்வீக, பரம்பரை சொத்தாக அல்லாமல் ஒரு ஆண் தன் சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்கி இருந்தால் அந்த சொத்துக்கான உரிமை அவருக்கு மட்டுமே உள்ளது. அது அவருக்குரிய தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படுகிறது. அதனால் அந்த சொத்துக்கு அவர் மட்டுமே உரிமை உடையவர் ஆகிறார். தன் காலத்துக்கு பிறகு தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்து யாருக்கு போய் சேர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது.
அதில் வேறு யாரும் தலையிட முடியாது. அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடவும் முடியாது. அதேபோன்ற சாரம்சம்தான் ஒரு பெண் பெயரில் உள்ள சொத்துக்கான உரிமையிலும் அடங்கி இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும் அது அந்த பெண்ணுக்கு மட்டுமே உரிமை உடைய சொத்தாக பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு பெண்ணுக்கு பெற்றோர் மூலமாக சொத்து வந் திருக்கலாம். அல்லது அந்த பெண் சுயமாக சம்பாதித்து அந்த வருமானம் மூலம் தனது பெயரில் சொத்து வாங்கி இருக்கலாம். அல்லது கணவர் தன் வருமானத்தில் தனது மனைவி பெயரில் சொத்து வாங்கி இருக்கலாம்.
தனிப்பட்ட சொத்து
இப்படி எந்த ரூபத்தில் பெண்ணின் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதற்கு அந்த பெண் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். ஏனெனில் இந்து வாரிசுரிமை சட்டப்பிரிவு ஒன்று ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும் அது அவருக்கு மட்டுமே உரிமை உடைய தனிபட்ட சொத்தாகும் என்ற சாரம்சத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே கணவன், தன் மனைவி பெயரில் இருக்கும் சொத்தில் தனக்கும் உரிமை உண்டு என்று நினைக்க முடியாது.
வீட்டில் உள்ள மற்றவர்களும் அந்த பெண்ணின் சொத்தில் பங்கு கோர முடியாது. மருகளும், மாமியார் சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாது. அந்த பெண் தனது காலத்துக்கு பிறகு யாருக்கு கொடுக்க நினைக்கிறாரோ அவருக்கு கொடுக்கலாம். அது அவர் சுயமாக எடுக்கும் முடிவாகவே இருக்கும். அவரை யாரும் நிர்பந்திக்க முடியாது. அந்த சொத்தை தனக்கு தான் தர வேண்டும் என்று கேட்க முடியாது. அந்த பெண் சொத்தை பிரித்து உயில் எழுதி வைப்பதாக இருந்தாலும், யாருக்கு எவ்வளவு குறிப்பிடுகிறாரோ அந்த பங்கை தான் பெற முடியும்.
முழுஉரிமை
அதுபோல் கணவன் தன் சம்பாத்தியத்தின் மூலம் மனைவி பெயரில் வாங்கி இருக்கும் சொத்துக்கும் முழு உரிமை கொண்டாட முடியாது. மனைவி பெயரில் இருந்தாலும் தான் தானே சம்பாதித்து சொத்து வாங்கினேன். அதனால் அந்த சொத்தை எளிதாக திரும்ப பெற்று விடலாம் என்றும் கணக்குப்போட முடியாது. அதேவேளையில் மனைவி பெயரில் வாங்கிய சொத்தை திரும்ப பெற ஒரே ஒரு வழி இருக்கிறது. அந்த சொத்தை வாங்கியதற்கான பணம் தன்னால் மட்டுமே கொடுக்கப்பட்டது, மனைவியால் செலுத்தப்படவில்லை என்பதை கணவன் நிரூபிக்க வேண்டும்.
அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் மட்டுமே மனைவி பெயரில் வாங்கிய சொத்தை கணவருக்கு வழங்க கோர்ட்டு உத்தரவிடும். இதுதவிர பெண் பெயரில் இருக்கும் சொத்துக்கு அவருக்கு தான் முழு உரிமையும் இருக்கிறது. வேறு யாரும் உரிமை கோர முடியாது. அந்த சொத்தை பகிர்ந்தளிப்பது அவருடைய சுய முடிவை பொருத்ததாகவே அமையும் என்ற அளவில் சட்டநடைமுறைகள் இருக்கின்றன.
http://lalpetexpress.com/

மனைகளுக்கான அங்கீகாரமும் நிபந்தனைகளும்

மனைகளுக்கான அங்கீகாரமும் நிபந்தனைகளும்ஒரு மனையை வாங்குவது பெரிய விஷயமில்லை. அந்த மனைக்கு அங்கீகாரம் உள்ளதா என்பதே முக்கியம். பலரும் அங்கீகாரம் இல்லாத மனையை வாங்கிவிட்டுப் பின்னர் அல்லல்படுவார்கள். ஒரு மனையை அரசும் அவ்வளவு சுலபத்தில் அங்கீகரித்துவிடுவதில்லை. மனைகளை அங்கீகரிப்பதற்காகவே நிறைய வழிகாட்டு நிபந்தனைகளை வகுத்துள்ளது அரசு. அவற்றை மனை வாங்குபவர்களும் தெரிந்துகொள்வது பயன் தரும்.
யார் யாருக்கு அதிகாரம்?
பொதுவாகக் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட லே அவுட்கள் பற்றிப் பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். கிராமப் பஞ்சாயத்துகளில்தான் அங்கீகாரம் இல்லாத மனைகள் அதிகளவில் விற்பனையாகின்றன. மனைகள் பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்றவை என விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், உண்மையில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்க அதிகாரம் இல்லை. மேலும், பஞ்சாயத்துப் பகுதிகளில் அங்கீகாரத்திற்கெனத் தனி அமைப்புகள் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை. உள்ளூர் திட்டக் குழு மற்றும் டிடிசிபி தான் லே அவுட்களை அங்கீகரிக்கின்றன. 5 ஏக்கர் பரப்பளவுவரை உள்ளூர் திட்டக்குழுவின் அதிகாரத்துக்குள்ளும் 5 ஏக்கருக்கு மேற்பட்ட லே அவுட்டை அங்கீகரிக்கும் அதிகாரம் டிடிசிபியின் வரம்புக்குள்ளும் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நிபந்தனைகள் என்னென்ன?
மனை லேஅவுட்டுக்கு என்னென்ன நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு அங்கீகாரம் அளிக்கிறது என்பதைப் பார்ப்போம்…
‪#‎குறிப்பிட்ட‬ நிலம் புறம்போக்கு இல்லை என்று தடையில்லாச் சான்று பெறுதல் அவசியம். நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அரசு அறிவிக்கை எண் 4(1) இன் படியும், நிலச் சீர்திருத்தச் சட்டம் (1961), நில உச்சவரம்பு சட்டம் (1978) இன் கீழ் வராமல் இருக்க வேண்டும். பருவ மழைக் காலத்தில் மனைப் பகுதியில் வெள்ளம் வந்திருக்கக் கூடாது.
‪#‎தாசில்தாரிடமிருந்து‬ நில அளவை புத்தகம்/ நகரச் சர்வே வரைபடம்; பட்டா/ சிட்டா/ நகர சர்வே நில ஆவணங்கள்; கிராம வரைபட நகல், நிலம் அமைந்திருக்கும் பகுதி வழியாகச் செல்லும் நீர்த்தடம் பற்றிய விவரங்களை அரசு ஆராயும்.
#2500 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவுள்ள நிலத்துக்கு, திறந்த வெளி ஒதுக்கீட்டுக்காக 10 சதவீதத்துக்கு மேல் இடம் ஒதுக்க வேண்டும். அதை வரைபடத்திலேயே காண்பிக்க வேண்டியது அவசியம்.
#குறிப்பிட்ட நிலத்தின் வழியாக மின்சாரம் / தொலைபேசி இணைப்பு வழி இருக்குமானால் அதை மாற்றுவதற்கான அங்கீகாரத்துக்கு 20 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தீர்வையை (ஸ்டாம்ப் பேப்பர்)அளிப்பது முக்கியம்.
எங்கெல்லாம் என்.ஓ.சி. தேவை?
இன்று ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எங்கு வேண்டுமானலும் மனைப் பிரிவுகள் உருவாக்குவதைப் பார்க்க முடிகிறது. எனவே மனையோ நிலமோ கீழ்க்கண்ட இடங்களுக்கு அருகில் இருந்தால் எங்கெங்குத் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1. குளமோ, ஏரியோ 15 மீட்டர் தூரத்தில் இருந்தால் பொதுப்பணித் துறை அல்லது தொடர்புடைய துறைகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
2. ரயில்வே இருப்புப் பாதைக்கு 30 மீட்டர் அருகில் இருந்தால் ரயில்வே துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது அவசியம்.
3. குப்பைக் கிடங்கு அருகில் இருந்தால் உள்ளாட்சித் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது முக்கியம்.
4. இடுகாடு / சுடுகாடு 90 மீட்டருக்கு அருகில் இருந்தால் சுகாதாரத் துறை அதிகாரியிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும்.
5. கல்குவாரிக்கு 300 மீட்டர் தூரத்தில் இருந்தால் சுரங்கத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்குவது கட்டாயம்.
6. விமான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் நிலம் இருந்தால் விமான நிலைய ஆணையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
7. இவை மட்டும் போதாது. 30 ஆண்டுகளுக்கு வில்லங்கமில்லாச் சான்றிதழும் அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையும்கூடத் தேவை.
மலைப்பிரதேசங்களில்…
கிராம, நகரப் பகுதிகளில் மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற நிபந்தனைகள் இருப்பதைப் போலமலைப்பிரதேசங்களில் சிறப்பு நிபந்தனைகள் உள்ளன.
‪#‎வேளாண்மை‬ பொறியியல் துறையிலிருந்து தடையில்லாச் சான்றிதழ்
‪#‎மாவட்ட‬ வன அதிகாரியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ்
‪#‎நிலவியல்‬ மற்றும் சுரங்கத்துறையினரின் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும்.
தமிழில் : ஷங்கர்
http://lalpetexpress.com/